Friday, January 12, 2018

மூன்று கவிதைகள்

                                           
                                        1. காவியம்  இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?
  சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்
 லாரி ஏறிவிட்டது.
 அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,
 கல்லூரி மாணவி ஒருத்தி 
 எஞ்சிய காலிரண்டைப் பற்றி 
அலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள்.
" குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு"
  காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர் 
 “ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று
      நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.


                                       2.  பிறகு
கடவுளே! நீர் முதலில்
மனைவிகளின் கன்னங்களிலிருந்து
வழுவழுப்பைச் சுரண்டி விடுகிறீர்
பிறகு
கணவர்களை கூண்டிலேற்றி
முதுகுத் தோலை உரித்தெடுக்கிறீர்

கடவுளே! நீர் முதலில்
கணவர்களின் சொற்களிலிருந்து
நறுமணத்தை விரட்டியடிக்கிறீர்
பிறகு
சத்தியம் செய்யச் சொல்லி
மனைவியரைத் துன்புறுத்துகிறீர்


                                   3. ஸ்டுபிட்ஸ்

அவ்வளவு பிரதானமான சாலையில்
அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.
பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் பார்த்தார்
சுதாரித்துக் கடந்த பிறகு 
காலூன்றி நின்று
சாலையைத் திரும்பிப் பார்த்தார்.
அதிகாரிகளைப் பார்த்தார்..
அரசைப் பார்த்தார்..
 அமைச்சரைப் பார்த்தார்..
முதலமைச்சரை, பிரதமரைப் பார்த்தார்.
ரோடு காண்ட்ராக்டரை பார்த்தார்
அந்தப் பள்ளத்துள்
யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ
அத்தனை பேரையும்  பார்த்தார்.                                   நன்றி : காலச்சுவடு - ஜனவரி -18

                                     
     

Wednesday, January 10, 2018

கவிதையின் விளையாட்டு - “ பழைய யானைக்கடை” நூலின் என்னுரை


                     
       சங்கத்திலிருந்து  சமகாலம் வரை கவிதைக்குள் விளையாட்டு ”  எப்படி இயங்கி வந்திருக்கிறது என்றறிந்து  கொள்ளும் விருப்பத்தில்   விளைந்ததே இந்நூல். மொழிக்குள் விளையாட்டு என்பது எது ? அது அங்கு எவ்விதம் தொழில்படுகிறது?   எந்த அளவில் விளையாட வேண்டும்?  என்பவை கொஞ்சம் சிக்கலான கேள்விகள். நகைச்சுவை, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் பரிட்சார்த்தமுயற்சி என்கிற ஒன்றையும் சேர்த்து, நான்  “விளையாட்டுஎன்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம், வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் துடுக்குத்தனமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.  “ இரசம் ” மனத்துக்குத் தக்க மாறும் என்பதே அறிஞர் கூற்று. நான் விளையாட்டு என்று கொள்வது உங்களுக்கு அப்படி தோன்றாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

   இது ஓரு முழுமையான ஆய்வுநூல் அல்ல. இப்பொருளைத் தீர ஆய்வு செய்ய வேண்டுமெனில் தமிழில் இது வரை எழுதப்பட்ட எல்லா கவிதைப் பிரதிகளையும் வாசித்திருக்க வேண்டும். அதற்கு இப்பிறவி போதாது. நீங்கள் ஒரு  “ சாம்பிள் சர்வேயைஎவ்வளவு பொருட்படுத்துவீர்களோ அவ்வளவு பொருட்படுத்தினால் போதும் இப்புத்தகத்தை. எனவே இந்நூல் விடுபடல்கள் உடையதே என்பதைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சங்கத்தை பொறுத்தமட்டிலும் அகநானுறும், நற்றிணையும் முக்கியமான விடுபடல்கள். இப்படி ஒவ்வொரு வகைமையிலும் ஏதோ ஒன்று விடுபட்டிக்கிறது. விடுபற்றவற்றில் விளையாட்டுகள் இருக்கலாம். அவை இன்னொரு ஆய்வாளனுக்கானது. இப்படி இன்னும் சிலர் இதில் இறங்கி விடுபடல்களை நிரப்பி முடித்தால் தமிழ்க்கவிதைக்குள் விளையாட்டின் இயங்குவிதம் குறித்த ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும். அந்த ஆய்வுகளுக்கான வாயிலாக இந்நூல் இருக்கட்டும்.

    பழந்தமிழ்க்கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் அதில் என்ன உள்ளது என்பதை சுருக்கமாக சொல்லி விட்டு, பிறகு அதில் விளையாட்டு எப்படி தொழில்படுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். பழந்தமிழ்கவிதைகளை கற்க ஆசை கொள்ளும் ஒரு புதுவாசகனை கருத்தில் கொண்டு இப்படி அமைத்திருக்கிறேன். வெறுமனே குறுந்தொகையின் 18 வது பாடல் என்று தகவல் தந்துவிட்டுப் போவதில் ஒரு இன்பமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. இம்முறையில் முதலில் அவன் குறுந்தொகையை குறித்து கொஞ்சமாகவேனும் அறிந்த கொள்கிறான். அதன் பிரமாதமான வரிகள் சிலவற்றை வாசித்து விடுகிறான். இப்போது குறுந்தொகை அவனுடையதும் ஆகி விடுகிறது. அவனுடைய குறுந்தொகையில் 18 வது பாடல் என்று சுட்டுவதில் ஒரு இணக்கம் வந்துவிடுகிறது. எனவே பாரதி வரை இம்முறையை கையாண்டிருக்கிறேன்.


    கவிதைதான் என் காதலி. வசனம் இடையில் வந்தவள். ஆனால் இடையில் வந்தவள் போலவே அவள் நடந்து கொள்வதில்லை. அவளும் சரிபாதி பங்கு கேட்கிறாள். எனினும் இந்நூல் கவிதை குறித்தான கட்டுரை என்பதால் இருவருக்குமிடையே தற்காலிக சமாதானம் நிலவுகிறது
.
   நண்பர் சீனிவாசன் ஒரு முறை கணையாழி வாசகர் சந்திப்பில் உரையாற்றுமாறு அழைத்த போது, சென்னை வரை சென்று “ கச்சேரி செய்வதில் உள்ள அலுப்பால் முதலில் மறுத்தேன். மறுத்த என்னை வருந்தி அழைத்துப் பேச வைத்தார். அப்போது ஒரு கட்டுரையாக எழுதியதை மேலும் மேலும் விரித்து எழுதி உருவானதே இந்நூல். எனவே நண்பர் சீனிவாசனுக்கு என் முதல் நன்றி.

     இந்நூல் சிறுகட்டுரையாக எழுதப்பட்ட காலத்தில் முதல் வாசகர்களாக அமைந்து  தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், பெருமாள்முருகன், சாம்ராஜ், ஷாலினி ஆகியோர்.  இவர்களுக்கு என் அன்பு.

   நூலின் செம்மையாக்கத்தில் என்னை விடவும் ஆர்வத்தோடு பங்கெடுத்த நண்பர் ஏ.வி.மணிகண்டனுக்கு எனது வந்தனங்கள்.

  கடும் வேலை நெருக்கடிகளுக்கிடையேயேயும் முன்னுரை அளித்திருக்கிற நாஞ்சில் நாடனுக்கு மிக்க நன்றி

  அட்டை வடிவமைப்பிற்கான முன்னேற்பாடுகளால் என்னை பீதியடையச் செய்த ரோஹிணி மணிக்கும், நூல் வடிவமைப்பில் பொறுமை காத்தமைக்காக சுபாவிற்கும் எனது நன்றிகள்.

    குறிப்பிட்ட ஒன்றைத் தீவிரமாகத் தேடுகையில் உண்மையில் அது துலங்கி வருகிறதா ? அல்லது மறைந்து கொள்கிறதா? எனக்கு ஒரு கட்டத்தில் எல்லாமே விளையாட்டு போலவும், எதுவுமே விளையாட்டில்லை என்பதாகவும் மயங்கிக் குழம்பி விட்டது. இந்தப் புத்தகத்தை முடித்து வைக்கும் இந்நாளில் அறிவின் நரகத்திலிருந்து எட்டிக்குதித்து தப்பி ஓடுகிறேன்.

   ”நகை என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையெனில், இந்நேரம் என் உடலில் பாதி கோணித்துக் கொண்டிருக்கும். ஒருவிதத்தில் அதற்கான நன்றிக்கடனாகவும் இத்தொகுப்பைக் கருதலாம்.
 

  எழுத்தைத் தவிர வேறு மகிழ்ச்சியில்லை என்பது உண்மையில் துரதிர்ஷ்டம். ஆனால், அதை அதிர்ஷ்டம் போலவே பாவித்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது.

                                      
                                             இசை

                                       இருகூர்  10/09/2017

Saturday, November 11, 2017

இரண்டு வழிகள்


பொதுவழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாகும் இடத்தில்
என்னய்யா இரைச்சல்?
பொது வழியும் சிறப்பு வழியும்
ஒன்றாவதால்
எழும் இரைச்சல்.

     நன்றி : உயிர்மை- நவம்பர்-17

Friday, November 10, 2017

டி.வி-யைப் போடு !

                                         
                                                                                 
நிசப்தம் ஒரு நச்சரவம்
அதன் நீலம் உந்தன்  மூளையைத் தீண்டும் முன்
டி.வி-யைப் போடு!

கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும்
வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம்
டி.வி-யைப் போடு!

எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும்.
விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும்
இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம்
டி.வியைப் போடு!

உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும்
கடவுளின் கருணையால் நீ அதிலில்லை
டி.வி-யைப் போடு!

முதலையின் வாயிலொரு வரிக்குதிரை...
உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது
முதலையையும் தெரியாது
டி.வி- யைப் போடு !

காமுகியொருத்தி 
தன் பரந்த முதுகை உவந்து தருவாள்
 கையது ஒடுக்கி காலது குறுக்கி
நீ அதில் கிடக்க
டி.வி-யைப் போடு!

பக்கத்து வீட்டின் மகிழ்ச்சி வெள்ளம்
பெருக்கெடுத்து வந்துனை
அடித்துப் போகும் முன்
டி.வி-யைப் போடு!


                                                      நன்றி : உயிர்மை - நவம்பர் -2017

Thursday, October 5, 2017

இந்தவாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப் போல் சிக்கலானது

இந்த ரம்யமான அதிகாலையில்
மாமதுரத் தேநீர் வாய்த்துவிட்டது
இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு
கீழே வைத்தேன்
தினத்தந்தியில் 
விருச்சிக ராசிக்கு என்ன பலனென்று
தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பினால்
இப்போது 
டேபிளில் இரண்டு டம்ளர்கள்
பக்கத்துச் சீட்டிலும் யாருமில்லை
சம அளவுள்ள தேநீருடன்
என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில்

எந்த டம்ளர் எனது டம்ளர் ?                                                

                                                                      விகடன் - தீபாவளி மலர் Saturday, July 8, 2017

முக்கால் நிமிஷம்

நள்ளிரவு 2:00 மணிவாக்கில்
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்

பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.

ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.

அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?

ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர்  கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?

நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?

          நன்றி: உயிர்மை- ஜூலை-2017
Friday, July 7, 2017

ஆயிரம் ஸ்தோத்ரம்

               
                       
                  


காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில்
மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன
அதில் மூன்றாவது சந்தில்
கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள்
பள்ளிச்சீருடையில்
நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்
அதன் ஐந்தாவது சந்தில்
19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட
அவள் அன்னை
அலுவலகச் சீருடையில்
விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.


முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார்
ஒரு அரசமரத்தடி பிள்ளையார்.
அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும்
இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார்.
வாயிலிருந்து விசிலை இறக்காமல்
ஓடியாடி பணியாற்றுகிறார்.
ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல
அந்தந்த சந்திற்கான வாகனங்களை
மிகச் சரியாக
அதனதன் வழியில் விடுகிறார்.


மகள் “ குரூப் ஸ்டடியை “ கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்
கல்வி முக்கியமல்லவா?
அன்னைக்கு பிரச்சனையில்லை
ஓவர் டைம் இருக்கிறது.
 செல்வமும் முக்கியம்.


“privacy “  என்கிற சொல்லால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும்
ஒருவர் போனை ஒருவர் நோண்டுவதில்லை.
ஒருவர் அறையை இன்னொருவர்
துப்பறிவதில்லை.


நள்ளிரவில் சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால்
இரண்டு போன்களிலும்
DIAL PAD TUNE “ கள் “ mute “ – இல் இருக்கின்றன.அன்னையர் தினத்திற்கு
மகள் ஒரு கட்டிமுத்தத்தை பரிசளிக்கிறாள்.
காதலர்தினத்திற்கு
அன்னை
வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட
தொப்பையைக் குறைக்கும் பெல்ட் ஒன்றை
பரிசளிக்கிறாள்.
மூன்றாவது சந்தும் ஐந்தாவது சந்தும்
அதனதன் கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால்
கட்டிமுத்ததிற்கோ, தொப்பை பெல்ட்டிற்கோ
ஒரு குறையும் நேர்வதில்லை.


உமைக்கினிய மைந்தன், கணநாதன்
நம் குடியை வாழ்விப்பான்.
அவனுக்குச் சொல்வோம் ஆயிரம் ஸ்தோத்ரம்.


                     
                    நன்றி : உயிர்மை : ஜூலை -2017