Skip to main content

திசேராவின் “ வெள்ளைத்தோல் வீரர்கள் “- ஒரு வாசிப்பனுபவம்

இந்த கட்டுரை சார்ந்து உங்களின் பொருட்படுத்தலுக்காக முதலிலேயே சில விஷயங்களை சொல்லி விடுவது உத்தமம். நான் கவிதைகள் எழுதி வருகிறேன். ஆனால் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் பத்தைத் தாண்டாது. நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. உலகின் தலைசிறந்த பத்துகதைகளுள் ஒன்று என்கிற நினைப்பில் என்னால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகள் பிரசுர வாய்ப்பை பெறவில்லை.தவிர கொலைக்களத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளை தின்று கொழுத்து, ஊதிப்பெருத்திருக்கும் சுகவாசியான நான் விமர்ச்சிக்கப் போகிறேன்.மேலும் இது என் முதல் சிறுகதை விமர்சனம். இக்கதைகள் தொகுப்பாக்கப் பட்ட ஆண்டு 2004. இதில் இருக்கும் சில கதைகள் 2000 ல் எழுதப்பட்ட்வை. ஆக சுமார் 10 வருட இடைவெளியில் நமது மண்டையை கொஞ்சம் பெரிதாக்கிக் கொண்டு 2012 இக்கதைகளை விமர்சிக்கப் போகிறோம்.

திசேராவின் கதை சொல்லல் முறை ரொம்பவும் நிதானமானது.உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்டு பீறிட்டெழும் மொழிதல் அனேகமாக எந்தக் கதைகளிலும் இல்லை. ”குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது” என்று துவங்கும் கதையிலும் கூட. இந்த நிதானமான மொழிதலோடு ஒரு மென் அங்கதம் தொகுப்பின் எல்லா கதைகளிலும் இழையோடு வருகிறது. அவர் அங்கதம் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பதில்லை. மாறாக ஒரு இதழ்பிரியா முறுவலோடு இக்கதைகளை படிக்க முடியும். இந்த மென் அங்கதம் கதையின் தீவிர தன்மையை கெடுத்து விடாது, வருவதே தெரியாமல் கதையுடன் பயணிக்கிறது.இதை இக்கதைகளின் சிறப்பென்று சொல்லலாம்.பொதுவாக அங்கதம் வசீகரமானது. வாசிப்பின்பம் அளிப்பது.ஆனால் பகடியின் ஆழத்தில் இருக்கு தீவிரத்தன்மை துலங்கி வராமல் வெற்றுப் பகடியால் அடித்துச் செல்லப்படும் பல கதைகளை நாம் படித்திருக்கிறோம். இத்தொகுப்பில் ”மறைந்து போன உருக்கள் “ என்கிற கதையைத் தவிர மற்றவற்றை இதில் சேர்க்க முடியாது.



சாப நிலத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் தவிர்க்க இயலாமல் மரணம் பற்றிய பீதி அனேக கதைகளில் காணக் கிடைக்கிறது. “ சாவு கொண்ட நாள்” என்கிற கதை சாவிலிருந்து தப்பித்து விட துடிக்கிறது எனில், “ மூன்று மரணங்கள் பற்றிய முன் குறிப்பு” இத்துயர வாழ்விலிருந்து தப்பி, மரணத்தை அணைத்துக் கொள்ள தவிக்கிறது. மரணதிற்கு பயந்து பயந்து வாழ்ந்து சலித்து ஒரு கட்டத்தில் தன் மரணத்தை தானே குரூரமாக நிகழ்த்திப் பார்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட ஒரு மனிதனின் கதையாகவும் நாம் இந்தக் கதையை வாசிக்கலாம்.

திசேராவும் இந்தக் கதையை தத்துவார்த்தப் பிண்ணனியியோடு தான் எழுதிப் பார்க்க முயன்றிருக்கிறார். ஆனால் அது அவர் சொல் பேச்சு கேளாமல் அரசியலோடு போய் நின்று கொள்கிறது. ” முதல் மரணம் சடப்பொருளான உடல் இறந்து போதல். இரண்டாம் மரணம் உயிரனுக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்ததிகள் இறந்து போதல். மூன்றாம் மரணம் புகழின் மரணம்” என்று தத்துவம் கதைக்கும் இக்கதை, மரணத்தை நோக்கி ஒரு மனிதனை மூர்க்கமாக தள்ளிய அரசியல் காரணிகளால் அரசியல் கதையாகவும் ஆகி நிற்கிறது.

இக்கதைக்குள் ஒரு சின்னக்கதை. உமாதேவியை சிவன் ஒரு நாள் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். செடிகள் அழகாய் பூத்துக் குலுங்கின.மலரொன்றை பறித்துத் தர முடியுமா ? என்றார். அதிகமாக சிந்தித்தாள் உமை. முன்னர் பறிக்கப்பட்ட அடையாளங்கள் தென்பட்ட சாய்ந்து கிடந்த செடியிலிருந்து பூவொன்றைப் பறித்து வந்தாள். அதற்காக அவள் சற்று தூரம் செல்ல வேண்டி இருந்தது. ஏன் இத்தனை செடிகளைத் தாண்டி அதில் சென்று பறித்தாய் என்றார் சிவன். உமை சொன்னாள் ” இவைகளின் அழகு கெட்டு விடுவதில் எப்பொதும் எனக்கு உடன்பாடில்லை”... அவளை நோக்கிச் சிரித்த சிவன் “ இதன் காரணமாகவே துன்பப்பட்டவையே இன்னமும் உழல்கின்றன”. திசேராவின் கதைகளில் நாம் எங்காவது அழ விரும்பினால் இந்த பத்தியை விட்டால் வேறு வழியில்லை. நாம் கவனமாக இங்கு அழுது விட வேண்டும்.

இக்கதையும், “ சாவு கொண்ட நாள் “ என்கிற கதையும் இத்தொகுப்பில் என்னை கவர்ந்தவை. காரணம் அதன் துல்லியமான மொழிதல். மேலும் பிடித்த ஒன்று “ கண்ணியத்தின் காவலர்கள்”என்கிற கதை. ஆனால் தமிழில் சில அங்கத சொற்கள் வயதாகி இறந்து விட்டன. “ கண்ணியத்தின் காவலர்கள்” என்கிற தலைப்பும் அதில் ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

சாவு கொண்ட நாள் கதையில் குண்டு வெடிப்பின் போது ஒரு சாப்பட்டுக் கடையில் சிக்கிக் கொண்டு அங்கிருந்து வெளிவர பயந்து இரண்டு பெரிய விறகுக்கட்டைகளால் தன்னை மறைத்துக் கொண்டு படுத்துக் கிடப்பவனின்

பீதி நிறைந்த நினைவுகளாக பேசப்படுகிறது. இக்கதையிலிருந்து ஒரு சிறப்பான பகுதியை எழுதிக் காட்ட முயன்றேன். ஆனால் அது ஒன்றொடொன்று பின்னப்பட்ட சங்கிலி போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கதையையே எழுதிக்காட்ட வேண்டியிருக்கும் என்பதால் தவிர்க்கிறேன். என்னளவில் இது ஒரு ஆகச் சிறந்த சிறுகதை.

“ உங்களுக்காய் எதையும் செய்வேன்.. நான் என்றால் நீங்கள்.. நீஙகள் என்றால் நான்.. உங்களுக்கு வருபவை எல்லாம் எனக்கு வருபவை.. உங்கள் குடிசைகளை மாளிகைகளாக்குவேன்.. .. தங்கத் தட்டில் உணவருந்த வைப்பேன்.. “ இந்த அரசியல் சூழ்ச்சியுரைகளின் முன்

“ கை தச்டி கோசம் போட்டு ஏமாந்து போனவர்கள் நாம்.. உயர்ந்தவன் அவன்.. “ என்று ஒரு எதிர்ப்புக் குரல் மெல்ல எழுகிறது. அக்குரல் வலுத்து ஒட்டுமொத்த கூட்டத்தையும் பற்றிக் கொண்டு , ஜனத்திரள் முழுதும் மேடையில் ஏறி நீதி கோரும் கதையாய் அமைந்திருக்கிறது, “ஒளிப்பொட்டின் விரிவு” என்கிற கதை. இது அம்மேடையில் சிலையாய் நிற்கும் பாரதியின் கோபாவேசமான சொற்களாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள், பயமெனும் பேய்தனை அடிப்பதையும், பொய்மைப் பாம்பை பிளந்து உயிரைக் குடிப்பதையும் பார்த்து பரவசமாகும் பாரதி மேடையிலிருந்து குதித்து ஆடுகிறான். இக்கதை முழுக்க கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் லட்சியக் கற்பனையாகவே சொல்லபடுகிறது. கதையை முடிக்கையில் திசேரா இரண்டு வரி எழுதுகிறார்...

“ நிஜத்துள் எங்கேயும் இப்படி தீ பற்றிக் கொண்டால் சந்தோசமாய் இருக்கும். நனவாக்கப் பட வேண்டிய தேவையாய் தோன்றிய உணர்வோடு அரங்கிலிருந்து வெளியேறினேன்’

இந்தக் கடைசி வரிகள் இக்கதையை கொஞ்சம் நீதிக்கதைகளின் பக்கமாய் முகம் திருப்பிக் கொள்ள செய்துவிடுகின்றன.

” கண்ணியத்தின் காவலர்கள்” கதை அரசியல் அதிர்வுகளோடு துவங்குகின்றன். ஆனால் சுகுமார், சதிஸ்குமார் என்கிற இரண்டு ஆண் நண்பர்களுக்கிடையேயான காதல் மிகவும் இயல்பாகவும், அன்பு ததுப்பும் சொற்களாலும் சொல்லப் பட்டிருக்கிறது.இக்கதை ஒரு தேய்வழக்கில் போய் முடிகிறது.ஒரினச்சேர்க்கையிலும் சாதி வந்து குறுக்கிடுகிறது.சுகு கண் மூடி கனவு நிலையில் ஒரு ஒளிமனிதனைக் காண்கிறான். சுகுவின் ஒளிமனிதன் வேறு யாராக இருக்க முடியும்? சதீஷ் தான். “ ஒளிமனிதன்- சதீஷின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது... பச்சை இரத்தம்.. அவன் வேற்று சாதி என்பதால் பச்சை இரத்தம் வடிந்தது.’ என்று எழுதுகிறார். கதை இப்படி முடிகிறது. “ கதவு தட்டப்படும் ஓசை. சுகு எழுந்து கதவைத் திறக்கிறான். தலையில் காயத்துடன் சதீஸ் சிரிக்கிறான். தலை வெடிப்பிலிருந்து கண்ணுக்கும், காதுக்கும் நடுவாய் சிவப்பு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.”

நமக்கு தவிர்க்க இயலாமல் “ உனக்கும் எனக்கும் இரத்தம் ஒரே நிறந்தாண்டா” என்கிற தழிழ் சினிமாவின் வீரவசனம் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது. muak”முகமணியும் மனிதன்” என்கிற கதையில் ஒரு மனிதனின் வெவ்வேறு முகங்களை எவ்வளவு நுட்பமாகவும், திறமையாகவும் சொன்னாலும், ஒரு மனிதனின் பலமுகங்கள் என்பது அடிப்படையில் ஒரு தேய்வழக்கே.

மறைந்து போன உருக்கள் என்கிற கதை தொகுப்பிலேயே பெரிய கதை.எனக்கு மிகவும் பிடித்த பாரதியாலும், அவனின் காத்திரமான சொற்களாலும், அவ்வையாலும் அவளின் அறம் தீட்டிய சொற்களாலும் சொல்லப்பட்ட்டிருந்தாலும் கூட மனதில் ஒட்டவில்லை. வானிலிருந்து இரண்டு தீக்குழம்புகள் பூமியில் விழுகின்றன.. ஒரு விஞ்ஞான புனைகதை போல் துவங்கும் இக்கதை அந்த இரண்டு உருவாக பாரதியையும், அவ்வையையும் சொல்கிறது. தலைப்பாகையும் கருப்பு கோட்டும் அணிந்திருப்பதால் பாரதி கங்காணியாகி விடுகிறார்.புதுமையை அதிகம் விரும்பும் திசேரா, அவ்வையின் பாடல்களுக்கு ட்ம்மி வரிகளை எழுதிப்பார்கிறார்.

“ பெரியது கேட்கும் பேரறிவு சிறுவா

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ வல்லரசுகளுள் அடக்கம்

வல்லரசோ ஆயுத்துள் அடக்கம்

ஆயுதங்களோ உயிர்களைக் கொல்லும்

அயூதங்களின் பெருமை சொல்லவும் அரிதே”

என்று எரிச்சலுட்ட்டும் பகடியால் நம்மை துன்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் அவ்வை இரானுவத்திடம் மாட்டிக் கொள்கிறாள். ஒரு ரானுவ வீரனின் வாயிலிருந்து சல்லொழுகுகிறது. திசேரா எழுதுகிறார்..

“ கம்பை தட்டிவிட்டு கைகளை உயர்த்தி, அப்படியே நிற்கும் படி மணிக்கட்டுகளை பற்றி உலுக்கி, தன் இரு கைகளையும் அவருடலில் ஒட்டி கீழ்நோக்கி வந்து கைகளை பின்னுக்காக்கி அவளை முன்னுக்கிழுத்து இறுக்கி அணைத்தான்’.. “ உங்கள் புத்தம் புதுமைக்கு ஒரு எல்லையே கிடையாதா திசேரா?”

சேலம் தக்கை கவிதை விமர்சன நிகழ்வில் “ ஆதவன் தீட்சண்யா கவிதைகள்” நூல் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அரசியல் கூருணர்வுள்ளவராக கருதப்படுகிற ஆதவனின் கவிதைகளை அவரைப் போலவே அரசியல் கூருணர்வுள்ளவராக கருதப்படுகிற விஷ்னுபுரம் சரவணன் விமர்சித்துப் பேசினார்.ஆதவனின் மொத்தக் கவிதைகளிலும் சரவணன் பிரதிநிதித் துவப்படுத்தி வாசித்த ஒரு கவிதை “ இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு” என்கிற கவிதை. அவ்வளவு கலைஅமைதி கூடிவரப்பெற்ற ஒரு அரசியில் கவிதை. இது எதேச்சையாக நடந்திருக்காது என்றே நம்புகிறேன். ஒரு சொல் கூட அதிர்ந்து பேசாத இந்தக் கவிதை நம் மனசாட்சியை விடாது தொந்தரவு செய்வது ஏன்? நமக்கு நாமே அருவெருப்பாக தோன்றும் மனநிலையை இது எவ்வாறு உருவாக்குகிறது? இதை கலையின் மகத்தான வெற்றி என்றழைக்க விரும்புகிறேன். ஆதவனின் எத்தனையோ கோபாவேசமான கவிதைகளை இந்தக் கவிதை எப்படி தாண்டி வந்தது. நான் இப்படி சொல்வதால் சத்தம் செய்யும் கவிதைகளில் கலைத்தன்மை கூடாது என்று பொருளல்ல. அது பற்றி தொடர்ந்து பேச இது இடம் அல்ல.

கலையாகாத ஒரு காத்திரமான அரசியில் பிரதியிடம் சொல்லிக் கொள்ள ஒன்று இருக்கிறது “ அன்பே நீ கலையாகும் போது இன்னும் அதிகமாக அரசியலாவாய்”.

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம