Skip to main content

Posts

Showing posts from February, 2016

இந்நகரத்துச் சாலைகளில் இன்று எத்தனை மலர்கள் பூத்தன !

                                                          துருவேறிய சைக்கிளில் மேற்கிலிருந்து கிழக்காக வந்தார் ஆஸ்துமா பீடித்த ஒரு கிழவர். புதுயுகத்து ஊர்தியில் புத்திளைஞனொருவன் கிழக்கிலிருந்து மேற்காக போனான். தவறி விழும் மூச்சுக்களை அள்ளிப்பிடித்த படியே தூக்கிக் கொண்டிருக்கும்   சைடுஸ்டேண்டுக்கு சைகை செய்தார் கிழவர். அப்போது அவர் தலைக்கு மேல் நின்றிருந்த மஞ்சரளி செடிக்கு ஒரு குடம் நீர் வார்க்கப்பட்டது அப்போதே ஒரு பூவும் பூத்தது. அந்த சைடுஸ்டேண்ட் மலருக்கு சாட்சிமலர் நான்.                                                        நன்றி : ஆனந்தவிகடன்                         

எலும்புருக்கி

                                 நீ அழைத்தது போலில்லை நான் அழைத்தது போலில்லை கூத்துமாக்கள் அழைப்பது போலில்லை கதா விருந்துகளில் அபிநயப்பது போலில்லை விஸ்வநாதன் அழைத்தது  போலவோ கோவிந்தராஜன் அழைத்தது போலவோ இல்லை இரவலர் நின்று அழைத்தது போலில்லை புலவர்கள் ஏத்தியழைத்தது போலில்லை முறுவல்கிருஷ்ணன் அழைத்தது போலில்லை கதறி குந்தி அழைத்தது போலவும் இல்லை எடுத்தோன்... கோர்த்தோன்... காத்தோன் ஆரத்தழுவி  அழைத்தோன்  ஓர் அழைப்பு... அது போலவும் இல்லை “ க.................ர்.....................ணா..... ”  என்று ஒரு நாயனம் அழைத்தது

காப்பு

காலிடைச் சந்தில் புகுந்தாடி அப்பாவின் நெற்றியில் இரத்தம் பெருக்கடித்த பூனைக்குட்டிகளை எங்காவது கொண்டு போய் தொலைத்துவிட்டு வரச்சொன்னாள் அம்மா. ஒரு சிமெண்டு பையில் திணித்துக் கட்டினேன். அவிழ்த்தெறிந்தேன் ஊர்க்கோடி வெளிக்காட்டில். ஓடிவந்து ஆளுக்கொரு காலாய் கட்டிக்கொண்டன. பற்றி பற்றி மேலேறப் பார்த்தன. உதறி வீசினேன் விழுந்தெழுந்த பிறகு அவற்றுக்கு எல்லாம் விளங்கி விட்டது. எத்தனையோ முறை கடவுளை நம்பிநம்பி ஏமாந்தவன் என்பதால் இந்த முறை வானத்தை அண்ணாந்து பார்க்கவில்லை. இரும்புருளிக் குண்டுகள் உருண்டோடும் தண்டவாளத்திடம் சொல்லி விட்டு வந்தேன் “ என் செல்வங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்..... ”