Skip to main content

நகைமொக்குள் உள்ளது ஒன்று

                     மனுஷ்யபுத்திரனின் “ தித்திக்காதே “ 

       

     
         

              பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
              பெண்மை உடைக்கும் படை.

 மாயங்கள் புரிவதில் வல்லவனான இக் கள்வனின் கொஞ்சு மொழியும், கெஞ்சு மொழியுமன்றோ  நம் பெண்மையை உடைக்கும் படை.
                                                                    ( திருக்குறள் –காமத்துப்பால் )


சிலைகளின் காலம் , இடமும் இருப்பும் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு...”  என்பதாக என் நூல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறேன். இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை.ஆனால் அது அடங்கி விடவும் இல்லை. மனுஷை சமீபத்தில்தான் சந்தித்தேன். இது உண்மை...  ஆனால் இந்த உண்மையைச் சொன்னால் இது ஏதோ அபாண்டமான பொய் போல தொனிக்கிறது. அவரை எனக்கு சுமார் 16 வருடங்களாகத் தெரியும் என்று மொக்கையாக ஒரு கணக்கு சொல்லலாம். ஆனால் அதுவும் பொய் போன்றே தொனிக்கிறது. உண்மையில் நான் என் பிள்ளைப்பிராயத்தில் எப்போது முதன்முதலாக மனங்கசந்து தனித்தழுதேனோ அப்போதிருந்தே எனக்கு மனுஷைத் தெரியும்.

  எந்தக்காதலி என்னை மடியில் கிடத்திக்கொண்டாளோ, எந்தக்காதலி என் தலைகோதி விட்டாளோ, எவள் என் விசும்பலை முத்தத்தில் ஒற்றி எடுத்தாளோ, எவள் தன் மூக்கு நுனியால் என் மூக்கு நுனியை முதன்முதலாகத் தொட்டாளோ, எவள் என் காதுமடல்களை இனிக்கக் கடித்தாளோ அவளுக்கு “ நீராலானது “ என்று பெயர். அவளைத் தவிர வேறு யாரும் என்னை மடியேந்தவோ, முடிகோதவோ இல்லை. இவை உங்களுக்கு முக்கியமற்றைவைகளாக இருக்கலாம். எனக்கு முக்கியம்.  நேராக “ தித்திக்காதே “ தொகுப்பின் 19-ம் பக்கத்தை பாருங்கள்... என்று சொல்லி விடலாம். ஆனால் அது கயமை. என்னை “ என் இளைஞன் “ பார்த்துக்கொண்டிருக்கிறான். “ எவ்வளவு பெரிய வேடதாரி நீ.. எவ்வளவை மறைக்கிறாய் பார்... “ என்றவன் கேட்கிறான்.
 தன் அந்தரங்கத்து காதலியை முத்தமிடக் களமிறங்கும் ஒருவனைப் பார்த்து அவன் அவ்வளவு கேலியாக நகைக்கிறான். அவனுக்கு துளி கூட பதற்றமில்லை. யாராலும் தன் முத்தத்தை பதிலி செய்து விட முடியாது என்பதில் அவனுக்கு அசைக்கமுடியாத இறுமாப்பு. “ இளைஞனே.. நீயே அவரது அந்தரங்கன்.. நான் வெறுமனே அவரது புத்தகத்தைப் பற்றி 10 நிமிடங்கள் பேசிவிட்டுப் போக வந்தவன். என் வழியின் குறுக்கே நின்று கொண்டு ஏன் தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடுகிறாய்..? “

  இலக்கியம் சார்ந்தும், கவிதை சார்ந்தும் மிக அரிதாக எனக்கு சில திமிரான உறுதிப்பாடுகள் உண்டு. அதிலொன்று “ மனுஷின் கவிதைகள் குறித்து என்னை விட வேறு எவனாலும் சிறப்பாக பேசி விட முடியாது ..என்பது. ஆனால் அந்தத் திமிர் என்னைப் போன்றே அநேக மனிதர்களிடமும் இருப்பதை சீக்கிரமே கண்டு கொண்டேன். புதிதாக வாசிக்கத் துவங்கியிருக்கும் ஒருவனின் மனதிலும் இந்தத் திமிர் இயல்பாகவே குடியேறி விடுகிறது. ஏனெனில் மனுஷின் கவிதைப் புத்தகத்தை புரட்டும் ஒரு புது வாசகன் சில பக்கங்களிலேயே தன்னை அதில் பார்க்கத் துவங்கி விடுகிறான். அவனை பரவசம் பற்றிக்கொள்கிறது. அவன் கண்கள் நிறைந்து, நிறைந்து வழிகின்றன. “ இது நான்தான்.. இது நான்தான்... “ என்று கத்திக்கொண்டே நடுரோட்டில் ஓட வேண்டும் என்று தோன்றிவிடுகிறது அவனுக்கு. அங்கு பிடிக்கிறது அவனுக்குச் சனி.
  தித்திக்காதே “ தொகுப்பில் 2016 -ம் ஆண்டில் அவர் எழுதிக்குவித்த 186 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதை விட இரண்டு மடங்கு கவிதைகளையும் அவர் இதே ஆண்டில் எழுதியிருக்கிறார். அவை இரு வேறு நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. தித்திக்காதே தொகுப்பின் கவிதைகளை காதல் கவிதைகள் என்று ஒரு வசதிக்காக வகைப்படுத்திக்கொள்ளலாம். உண்மையில் மனுஷின் அநேக கவிதைகளும் காதல் கவிதைகள்தான் என்பது என் எண்ணம். ஒரு காதலியின் முன் கசிந்துருகுவது போல் தான், காதலியின் முன் கண்ணீர் மல்குவது போல் தான், அவள் முன்னே கைநரம்பை அறுத்துக்கொள்வது போல் தான் அவர்  அநேக கவிதைகளை எழுதுகிறார். சமயங்களில் முத்தஞ்செய்கிறார். சமயங்களில் கடித்து வைக்கிறார். ஒரு அந்தரங்கத்தின் கிசுகிசு “ அவரது கவிதைகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் வழியே  அவர் இன்னொரு மனத்தின் ரகசியத்தை மிகச்சரியாக சென்று தொட்டு விடுகிறார். இந்த அந்தரங்கத்து கிசுகிசுக்களின் வழியே தான் அவரை நோக்கி எண்ணற்ற “ லூஸ்ஹேர்கள் “ படையெடுத்து வருகின்றன.

 பெருந்தவிப்பின் உக்கிரத்தில் எழுதிக்குவிக்கப்பட்ட கவிதைகளுக்கே உரிய சூடு இதில் உண்டு. இதன் உபவிளைவாக சில கவிதைகள் ஒரு வித “ கச்சிதமின்மை “யுடன் வெளிப்பட்டுள்ளன.சில கவிதைகளை நீக்கியிருக்கலாம் என்றும், சில கவிதைகளை முடித்திருப்பதற்கும் சற்று முன்பாகவே முடித்திருக்கலாம என்றும் தோன்றுகிறது. உதாரணமாக “ நீ என்னை உணரச்செய்யும் விதம் “ கவிதையில் வரும் இடை வரிகளான..

 “ அவனது நடனம் / அவனைக் கொன்று விட்டது
   ஒருவர் பிரபஞ்சத்தின் விளிம்புகளுக்கு
   நடனமாடிக் கொண்டே செல்லலாம்
   என்று நினைக்கக் கூடாது.
   சட்டென அந்தப் பக்கம் / விழுந்து விடுவோம்  ... “

என்கிற வரிகள் எனக்குப் போதுமானவை. ஆனால் அவருக்கு போதவில்லை. அதைச்சொல்ல அவர் அக்கவிதையை எழுதவும் இல்லை. நின்று நிதானிக்க அவருக்கு நேரமில்லை. நின்று நிதானித்திருந்தால் இவ்வளவு கவிதைகளை எழுதியிருக்கவும் வாய்ப்பில்லை.. கனகச்சிதம் என்று சொல்லவும் நிறைய உதாரணங்கள் உண்டு..
   
 அன்பைத்தின்னுதல்

சாப்பிட உனக்கு
என்ன பிடிக்கும் ?
அன்பாய்த் தரும்
எதையும்
சாப்பிடப் பிடிக்கும்.
அன்பையே சாப்பிட
அதைவிடப் பிடிக்கும்.


தூய்மை தரும் தனிமை


உன் அன்பை
உன் காதலை
இவ்வளவு பரிசுத்தமாக
வைத்துக் கொள்ளாதே
என்னால்
அதைக் கூச்சமின்றி
புழங்க முடியவில்லை.


இயல்பாகவே நான் மனுஷின் கவிதைகளிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன்.வரவில்லைஎன்பதற்கும் “ வரவேயில்லை “ என்பதற்கும் இடையே ஒலிப்பது வெறும் ஏகாரமல்ல என்பதை அவரிமிருந்து தான் கற்றுக் கொண்டேன். “ ஒரு “ என்கிற சாதாரணச் சொல் எவ்வளவு சங்கீதமானது என்பதையும். அவரது பல கவிதைகளில் இந்த “ஒரு“ வை நீக்கி விட்டு வாசிக்கவே இயலாது. வாசித்தால் வாய் கோணித்துக் கொள்ளும். உரைநடையை ஒடித்துப் போட்டது போன்று பாவனை காட்டும் இக்கவிதைகள், உண்மையில் பாடல்களின் சாயல்களால் ஆனவை.

  வெற்று அழகில் மயங்கிப் பிதற்றும் சாதாரணக் காதல் கவிதைகள் அல்ல இவை. காதலின் லீலாவினோதங்களை கண்டடைய முயல்பவை. எவ்வளவு புரட்டினாலும் தீர்ந்துவிடாத காதலின் புத்தகத்தை முழுசாகப் புரட்டிப் பார்த்து விட பேராசை கொள்பவை. “ சூது கவ்வும் “ திரைப்படத்தில் மிகச்சரியான ஒரு தருணத்தில்,  மிகச்சரியாக ஒரு வசனம் வரும்... “  வாழ்றான்யா ... “ என்று.  “ நகம் “ கவிதையை வாசிக்கையில் அவ்வசனத்தைச் சொல்லிக் கொண்டேன். இத்தனை இத்தனை கவிஞர்கள் தோன்றி காதலை இப்படி புரட்டிப் புரட்டி எடுத்தாலும் அதன் வசம் இன்னும் ஏதோ மிச்சமிருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்..

            நகம்

நகம் வெட்டிக் கொள்வது
எனக்கு மிகவும்
பிடித்தமான செயல்

யாரோ ஒருவர்
என் கைகளைத்
தன் தொடை மேல் வைத்துக் கொண்டு
என் நகத்தைத் கவனமாகத் துண்டிக்கும் போது
அந்த நகம் உடையும் ஓசையில்
பிரியத்தின் சங்கீதங்கள் கேட்பது
எனக்கு மட்டும்தானா ?
அந்த நகங்களால்
பிரியத்தின் மென் இதழ்களை
சற்றே கிள்ளிப் பார்த்திருக்கிறேன்.
என்னால்
பிறருக்குக் கீறல்கள் ஏற்படும்
காலங்களில் எல்லாம்
எனக்கு நகம் வெட்டிவிடும் ஒருவரைத் தேடி
நான் தாமதிக்காமல் கிளம்பி விடுகிறேன்.

நான் நகம் வெட்டிக்கொள்ளும்
ஒவ்வொருமுறையும்
என் உடல் எடை
கணிசமாக குறைந்து விடுகிறது.

காதலின் சின்ன்ஞ்சிறு தருணத்தை கூட கவிதையாக்கி விட மனுஷால் முடிகிறது. உண்மையில் காதலில் சின்னஞ்சிறு தருணம் என்று ஏதேனும் உண்டா என்ன ? நகம் கவிதையை வாசித்து முடிக்கையில் தன்னியல்பாக எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. ஆஹா.. வெகு காலம் கழித்து நாமும் ஒரு காதல் கவிதை எழுதி விட்டோம் ... “ என்று அகம் மகிழ்ந்து போனேன். சில பக்கங்களைப் புரட்டினால் அந்தக் கவிதையையும் மனுஷே எழுதி வைத்திருப்பதை கண்டேன். மனமொடிந்து போனேன்..  “  மஹா ப்ரபொ ... நாங்களும் காதலிக்கிறோம்... எங்களுக்கும் கொஞ்சம் கவிதைகள் வேண்டும்.. “



           




  ஒரே ஒரு ஆசுவாசம் தான் எனக்கு. காதலைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிற ஒருவனால் சத்தியமாக நிம்மதியாக காதலித்து விட முடியாது என்பதுதான் அது 
.
 காதலைப் போலவே காமத்தின் வெவ்வேறு குணரூபங்களையும் நெருங்கிப் பார்க்கின்றன இக்கவிதைகள். தொகுப்பில் நிறைய ஹுக்குகள் “ காணக்கிடைக்கின்றன. ஹூக்குகளில் தானே மொத்த காமமும் முடிச்சிட்டுக் கட்டப்பட்டுள்ளது. மனிதனுக்கு அதை அவிழ்த்து,அவிழ்த்து தீர்ந்து விட்டதா என்ன ?  மோகனரங்கனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது..

  “ களைந்த பின் / தேடி / ஏமாறுகிறேன்
   உடுத்தி/ நீ / நடக்கையில்/ பிறப்பித்து
   உலவவிட்ட இரகசியங்கள் ஒவ்வொன்றையும்.

உண்மையில் ஹூக்கை அவிழ்த்ததும் காமம் விடை பெற்றுக்கொள்கிறதா என்ன ? நான் இதில் சிறுவன்.. மனுஷைப் போன்ற அறிஞர்களிடம் இந்த சந்தேகத்தை விட்டு விடுகிறேன். ஹூக்குக்கு பதிலாக பொத்தானைப் பற்றிய வரியொன்று போகத்திற்கு நிகரான போதையை அளித்தது..

   “ இறுக்கமான ஆடைகளிலிருந்து
     மெல்லிய ஆடைகளுக்கு
     மாறிக் கொண்டிருக்கிறாயா என்ன
     ஒரு பட்டன் விடுபடும் ஓசை
     ஒரு சிறிய துப்பாக்கி குண்டினைப் போல
     என் மூளையில் வெடித்துச் சிதறுகிறது ....

                         ( தண்ணீரைப் போல வந்தவளுக்காக )

வாழும் வரை ராமச்சந்திர மூர்த்தியாகவே வாழ்ந்து மரிக்கக் கடவது.. “ என்று சபிக்கப்பட்ட ஜீவன்களின் மனதில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்த வல்லவை மனுஷின் சொற்கள்...
  
“ எதிர்பாராத
   ஒரு ஸ்பரிசத்தை விடவும்
   எதிர்பாராத
   ஒரு முத்தத்தை விடவும்
   சடாரென உதறும் கூந்தலின்
   ஒரு நீர்த்துளி
   என் இச்சையின் கதவுகளைப்
   படபடவென வேகமாகத் தட்டுகிறது ...

                      ( உதறும் கூந்தலில் உதிரும் நீர்த்துளிகள் )

இந்த சடார் சத்தத்தின் சவுக்கு வீச்சு “ என்னைப் போன்ற எளிய ஜீவன்களின் நெஞ்சில் வந்து விழுகிறது.

  மனுஷய்புத்திரன் தன் எழுத்துக்களின் வழியே எனக்கு நிறைய தந்திருக்கிறார். பதிலுக்கு நான் ஒரு  “ வாணி ஸ்ரீ யை அவருக்கு தந்து கணக்கை நேர் செய்து கொண்டேன். மிச்சமிருக்கும் கணக்கு என்பது பல்லிடைத் துணுக்கு. உண்மையில் என் வாணி ஸ்ரீ அவ்வளவு சோர்ந்தவளாக வீணையின் மேல் தலைசாய்த்து தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். .மனுஷ் தான் அவளைத் தொட்டெழுப்பினார். நீ ஒரு வாணி ஸ்ரீ.. இப்படி சோம்பித் திரியலாமா ? “ என்று அவர் தான் அவளை உற்சாகீ ஆக்கினார். பிறகு அவள் வீணையிலிருந்து மகத்தான நாதங்கள் எழுந்து வந்தன.

  உண்மையில் அவளை என்னை விட  நன்றாகவே பார்த்துக்கொண்டார் மனுஷ். அவளை முகநூல் முழுக்க பெருமிதத்தோடு உலவ விட்டார். அவள் நாளிதழ்களில் வந்தாள். சேனல்களில் பேசப்பட்டாள். இவ்வளவு சொகுசை அனுபவித்து விட்ட பின் , அவள் மீண்டும்  வானம் பொத்துக் கொண்டு ஊற்றும் 42 A - வில் என் பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்து வருவாள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  இனி  “ அவள் இல்லை... வரமாட்டாள் ... நம்பாதே... “ என்று என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.
வாணி ஸ்ரீ கவிதைகளை குறித்த நண்பர் விஷால்ராஜா வின் கட்டுரை ஒன்று இப்படிச் சொல்கிறது...

“ நான் இதில் முக்கியமாக கவனிக்கிற விஷயம். மனுஷ் தன்னுடைய கவிதைகளில் பகடியை இவ்வளவு தூரத்திற்கு அனுமதிப்பது. அவர் சமீபமாக எழுதுகிற கவிதைகளில் வழக்கத்திற்கும் மாறாக அதிகமாக பகடியைப் பார்க்க முடிகிறது. மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் மட்டுமல்ல. இன்றைய தமிழ் கவிதைகளில் பகடி ஒரு அங்கமாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு சிலரின் தனி அடையாளமாக இருந்த பகடி தற்போது ஒரு பொதுக் கூறாக மாறி விட்டதோ என்கிற எண்ணம் வருகிறது.. “

   “ நீ இப்படி திடுதிப்பென
     பஸ்சைப் பிடித்து வந்து இறங்கினால்
    எனக்கு அலுவலகத்தில்
    பெர்மிஷன் போடுவது
    மிகவும் கஷ்டம் வாணி ஸ்ரீ ..... “

 என்கிற வரிக்கு நான் வெடித்துச் சிரித்தேன். மனுஷின் வரியொன்றை வாசித்து விட்டு நான் வெடித்துச் சிரிப்பது அநேகமாக இது முதன்முறை என்றே நினைக்கிறேன்.

   பகடிக்கவிதைகளில் விளையாட்டு உண்டு. ஆனால் அவை ஒருக்காலும் வெற்று விளையாட்டுகள் அல்ல. வாசகனை கிச்சுகிச்சு மூட்டுவது அதன் நோக்கமல்ல.அதற்கு ஒரு நகைச்சுவை துணுக்கு போதுமல்லவா? இன்னோரு மனிதன் இதே வரிக்கு தலையை தரையில் முட்டிக்கொண்டு அழுதிருக்கவும் கூடும் .அவனுக்கு உண்மையிலேயே பெர்மிசன் கிடைக்காமல் போயிக்கலாம். வாணி ஸ்ரீ யை பார்ப்பதற்கு கூட அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்பதை விட, சிவாஜிகளின் வாழ்க்கையில் வேறு என்ன துயரம் இருக்க முடியும்?

  இத் தொகுப்பில் பேன் புராணம் “ என்கிற ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
    “ மருந்துகளும் ஷாம்புகளும் வந்து விட்டன.
     ஒரு முறை கூட
     கரத்தால் பேன் பார்க்கப்பட்ட
     ஆன்மிக அனுபவம் கிட்டாத
     ஒரு தலைமுறையே வந்து விட்டது .... “

 என்கிறது இதன் சில வரிகள்..  “ ஆன்மிக அனுபவம் “ என்கிற வரியை வெறுமனே நாம் சிரித்து  விட்டுக் கடந்தால் அது நல்ல வாசிப்பல்ல என்பதே என் எண்ணம்.  உண்மையில் பேன் பார்க்கும் நிகழ்வின் மாயங்களைப் பேசுகிறது இக்கவிதை . ஒரு சாதாரண நிகழ்வாகத் தெரிகிற, எழுதினால் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்வின் புதிர்களை ஆராய விரும்புகிறது. அது என்ன விதமானதொரு விசித்திர அனுபவம்  ? என்கிற கேள்வியை எழுப்பிப் பார்க்கிறது.

  இவரது கவிதைகளின் மேல் “ கூறியது கூறல் “ என்கிற  குற்றச்சாட்டு உண்டு. ஆம்.. மனுஷின் கவிதைகளில் அது உண்டு தான். அதாவது எல்லா கவிகளின் கவிதைகளிலும் ஒரு வித கூறியது கூறல் உள்ளது போலவே மனுஷின் கவிதைகளிலும் அது உண்டு.

           முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
           நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு.

முகைமொக்குள் உள்ளது ஒரு நறுமணம். அது போலே அவள் நகைமொக்குள் உள்ளது ஒரு குறிப்பு.
                                          (  திருக்குறள் – காமத்துப்பால் )


               ( தித்திக்காதே – மனுஷ்யபுத்திரன் – உயிர்மை பதிப்பகம் - விலை ; 330 )

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான